உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான தடை தாண்டுதல் போட்டியில் மேட்டுப்பாளையம் வாலிபர் தங்க பதக்கம் வென்று சாதனை

Published On 2023-06-04 09:00 GMT   |   Update On 2023-06-04 09:00 GMT
  • தனுஷ் ஆதித்தன் 14.41 நிமிடத்தில் தாண்டி வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.
  • ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவதே எனது ஒரே இலக்கு என்றார்.

மேட்டுப்பாளையம்,

கோவை மேட்டுப்பாளையம் சந்தை கடையை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் வீட்டு வேலை செய்து வருகிறார்.

இவருக்கு தனுஷ் ஆதித்தன் (21). திவாகர் என 2 மகன்கள் உள்ளனர்.

இதில் தனுஷ் ஆதித்தன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இறுதி யாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளி படிப்பு காலத்தில் இருந்து தடகள போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வந்துள்ளார்.

இதனிடையே கடந்தாண்டு டிசம்பர் மாதம் கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்று இருந்தார்.

இதில் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்றார். இதில் 14.06 நிமிடத்தில் தாண்டி முதல் பரிசை பெற்றுள்ளார்.

இதையடுத்து இவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். அதில் 28 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 14.41 நிமிடத்தில் தாண்டி வெற்றி பெற்று தங்க பதக்கம் பெற்றார்.

இதையடுத்து லக்னோவில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த தனுஷ் ஆதித்தனுக்கு மேட்டுப்பாளையம் சர்வ வல்லமை விளையாட்டு குழுவினர் சால்வை அணிவித்து மாலை போட்டு வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து தனுஷ் ஆதித்தன் கூறுகையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்று தருவதே எனது ஒரே இலக்கு என்றார்.

Tags:    

Similar News