முருங்கை காய்களை வாங்க ஆள் இல்லாமல் மரத்திலே காய்ந்து வீணாகும் அவலம்
- 1 கிலோ ரூ.10-க்கு கூட வாங்க ஆள் இல்லை.
- பல விவசாயிகள் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவோணம், சிவவிடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மானாவாரி நிலங்களாக இருப்பதால் ஆண்டுதோறும் விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு காய்க்கும் முருங்கைகள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஆண்டு முருங்கைக் காய்கள் நன்றாக காய்த்துள்ளன. ஒரு ஏக்கருக்கு சுமார் 1 டன் அளவுக்கு முருங்கை காய்த்துள்ளது. ஆனால் உரிய விலை இல்லாததால் வியாபாரிகள் வாங்க வரவில்லை. 1 கிலோ ரூ.10-க்கு கூட வாங்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள்
கூறும்போது:-
தற்போது ஆடி மாதம் என்பதால் முகூர்த்த நாட்கள் இல்லை. இதனால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருப்பதால் முருங்கையின் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. வியாபாரிகளும் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பல விவசாயிகள் காய்களை பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். தற்போது தக்காளி உள்பட சில காய்கறிகளின் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது வேதனையாக உள்ளது என்றனர்.
இது பற்றி தோட்டக்கலை அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து மதுரை, திண்டுக்கள், திருச்சியில் உள்ள வியாபாரிகளின் தொடர்பு எண்களை விவசாயிகளிடம் கொடுத்துள்ளோம். அவர்களும் முருங்கைக்காய் வாங்குவது தொடர்பாக பேசி வருகின்றனர். அரசு சார்பில் விவசாயிகளுக்கு என்ன செய்ய முடியுமோ அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம் என்றனர்.