கோவையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்
- ஆஸ்பத்திரி வாயிலில் குவியும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
- ஆஸ்பத்திரி வளாகத்தில் பார்க்கிங் இடம் ஒதுக்க வலியுறுத்தல்
குனியமுத்தூர்,
கோவை திருச்சி சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரி முன்பாக 24 மணி நேரமும் மக்கள் வெள்ளம் அலைமோதுவது வழக்கம். கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு உள்ளே செல்வதும், வெளியே வருவதையும் எந்த நேரமும் பார்க்க முடியும்.
கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு இரு சக்கர வாகனங்கள் வரிசையாக பார்க்கிங் செய்யப்பட்டு உள்ளன. இங்கு வருபவர்கள் அவசரத்தில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு உள்ளே சென்று விடுகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி முன்பாக இருசக்கர வாகனங்களின் குவியலை எந்த நேரமும் காண முடிகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடுகிறது.
ஆஸ்பத்திரிக்கு நேர் எதிரே பஸ் நிலையம் உள்ளது. அனைத்து பஸ்களும் உள்ளே சென்று தான் திரும்ப வேண்டும். இதனால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் நோயாளிகளும் வரிசையாக சாலையைக் கடந்து செல்லும் காட்சியையும் பார்க்க முடிகிறது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் கூறுகையில், பெரிய ஆஸ்பத்திரிக்கு முன்பாக அகலமான சாலைகள் இல்லை. அங்கு தாறுமாறாக மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்வதால், பஸ்கள் கடந்து செல்வது சிரமமாக உள் ளது.
எனவே ஆஸ்பத்திரிக்கு வரும் வாகனங்களை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைப்பதற்கு பார்க்கிங் இடம் ஒதுக்க வேண்டும். அப்படி செய்தால் போக்குவரத்து சாலையை வாகனங்கள் முழுவதுமாக பயன்படுத்த முடியும். பஸ்களும் நெரிசல் இன்றி இலகுவாக நகர முடியும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.