நகைகளுக்கு பதிலாக பையில் கல்லை வைத்து கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய மர்மநபர்கள்
- உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம்.
- சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்மநபர்களிடம் கொடுத்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). சம்பவத்தன்று இவர் மயிலாடுதுறை சென்று விட்டு தஞ்சைக்கு பஸ்சில் வந்தார்.
பின்னர் தற்காலிக மார்க்கெட் அருகே உள்ள ஏ.ஓய். நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், சரஸ்வதியின் அருகில் மோட்டார் சைக்கிளில் நிறுத்தினர்.
இங்கு திருட்டு சம்பவம் அதிகமாக நடக்கிறது. இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு செல்லாதீர்கள். உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம் என சரஸ்வதியிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார்.
இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர்கள் நகைகளுக்கு பதிலாக ஒரு கல்லை அந்தப் பையில் மறைத்து வைத்து கொடுத்தனர். அந்தப் பையுடன் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி அவிழ்த்து பார்த்த போது நகைகளுக்கு பதிலாக கல்லை ஏமாற்றி வைத்து தன்னை மர்மநபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.