ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு அளிக்கும் நாகை சமூக ஆர்வலர்
- முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
- ஆதரவற்ற மனிதர்களை தேடி சென்று முடி வெட்டி, குளிக்க வைத்து அழகு படுத்தி புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம்மாவட்டம் திட்டச்சேரி பகுதியை சேர்ந்தவர் கலைவாணன்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக உறவுகளால் கைவிடப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்களின் மறுவாழ்வுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி திரியும் ஆதரவற்றோர் மற்றும் நாகூர் தர்ஹா, நாகப்பட்டினம் புதிய பேரூந்து நிலையம், சாலைகள், இரயில் நிலையங்கள், சுற்றுலாத்தளங்களில் அழுக்கடைந்து, கிழிந்த உடைகளோடு, தாடி, முடி வளர்ந்து கவனிப்பாளர்களற்று அழுக்கடைந்து கிடக்கும் மனிதர்களை நாம் கடந்து சென்று இருப்போம்.
ஆனால் கலைவாணனோ அப்படிப்பட்ட மனிதர்களை தேடி சென்று அவர்களுக்கு தானே முடி வெட்டி, தாடி, மீசை எடுத்து, குளிக்க வைத்து அழகு படுத்தி அவர்களுக்கு புத்தாடை வழங்கி உணவு வழங்கி வருகிறார்.
மேலும் உறவுகளால் கைவிடப்பட்ட வர்களையும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களையும் அரவணைத்து அவர்க ளுக்கு மறுவாழ்வுஅளித்து பராமரித்து வருகிறார்.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இது போன்றவர்க ளுக்கு மறு வாழ்வு அளித்துள்ள கலைவாணன் எந்த வித எதிர்பார்ப்புகளும் இன்றி இந்த சேவையை செய்து வருகிறார்.
உறவுகளால் கைவிடப்பட்டவர்களை மீட்டு அவர்களின் உறவுகளிடம் சேர்ப்பதும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து தொடர்ந்து அவர்களை பராமறித்து தினம் தோறும் உணவளித்து வருகிறார்.
இதுகுறித்து கலைவாணன் கூறும் போது இது போன்று சாலைகளில் உள்ள மனிதர்கள் ஒருக்காலத்தில் நன்றாக வாழ்ந்து இருக்க கூடியவர்கள்தான் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இப்படி இருக்கும் அவர்களைம் சக மனிதர்களாக நினைத்து அரவணைக்க வேண்டும் என்றார்.
ஆதவறவற்ற மனிதர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் கலைவாணன் செயல் பலராலும் பாராட்டு வருகிறது.