உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2023-10-26 10:55 GMT   |   Update On 2023-10-26 10:55 GMT
  • குமாரபாளையம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது.
  • காவிரி ஆற்றில் மணல் திருடுவது குறித்து தகவல் அறிந்து வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவு காவிரி கரையில் சோதனை நடத்தினர்.

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆறு ஓடுகிறது. இந்த இரு மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி ஆற்றில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மணல் திருடும் கும்பல் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள் மூலம் விடிய, விடிய காவிரியில் மணல் அள்ளுவதாக வருவாய் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்தது.

இந்த நிலையில் பள்ளிபாளையம் சாலை பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள காவிரி ஆற்றில் மணல் திருடுவது குறித்து தகவல் அறிந்து வி.ஏ.ஒ. முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் நேற்று இரவு காவிரி கரையில் சோதனை நடத்தினர்.

அப்போது 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் காவிரி ஆற்றிலிருந்து மணல் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மணலுடன் 2 மாட்டு வண்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்த மாது, சேகர் மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் அப்பா, மகன், பேரன் ஆவார்கள். இதனையடுத்து வருவாய்த்துறையினர் 3 பேர் மீதும் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News