நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி அளித்தும் பணிகளை தொடங்காத ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை
- பி.டி.ஓ. அலுவலகத்தில், பஞ்சாயத்து நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
- தொடர்ந்து கள ஆய்வு செய்து பணிகளை கண்காணிக்க வேண்டும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் பி.டி.ஓ. அலுவலகத்தில், பஞ்சாயத்து நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்றனர். அதில், பஞ்சாயத்து அளவில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் குறித்தும், கால தாமதத்திற்கான காரணம், பணிகளின் தற்போதைய நிலை, பணி முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, கூட்டத்தில் கலெக்டை உமா பேசியதாவது:
பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு வசதி, பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை பஞ்சாயத்து நிர்வாகம் குறிப்பிட்ட காலத்திற்குள் தொடங்கி, விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், அதன் முன்னேற்றம் குறித்து, பி.டி.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தால், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தொடர்ந்து கள ஆய்வு செய்து பணிகளை கண்காணிக்க வேண்டும். நிர்வாக அனுமதி வழங்கிய பின்னரும் பணிகளை தொடங்காத பஞ்சாயத்து செயலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், பி.டி.ஓக்கள் சுந்தரம், அசோகன் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.