உள்ளூர் செய்திகள்

வீடு வாடகைக்கு விடும் முன் போலீசார் அனுமதி பெற வேண்டும்

Published On 2023-10-26 10:53 GMT   |   Update On 2023-10-26 10:53 GMT
  • முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பரமத்திவேலூர் போலீஸ் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய 5 போலீஸ் நிலைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்கள் பற்றிய முழு விபரம் அறிந்து, அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும்.

முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். போலீசார் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே அவர்களை வாடகைக்கு குடியமர்த்த வேண்டும்.

மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

எனவே பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து குற்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News