உள்ளூர் செய்திகள்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில்தங்கத்தேர் இழுக்க முன் பதிவு தொடக்கம்

Published On 2023-07-10 07:50 GMT   |   Update On 2023-07-10 07:50 GMT
  • ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
  • அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து தேரோட்டம் நடைபெறும். தங்கத்தேர் இழுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு பக்தர் மட்டுமே, ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் கோட்டை பகுதியில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர், சாந்த சொரூபியாக வணங்கிய நிலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாமக்கல் வந்து ஆஞ்சநேயரை தரித்து செல்கின்றனர்.

பதிவு செய்துள்ள கட்டளைதாரர்கள் மூலம், தினசரி காலை 9.30 மணிக்கு சுவாமிக்கு 1,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், திருமஞ்சள், நல்லெண்ணை, பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்களால் சுவாமிக்கு அபிசேகமும் நடைபெற்று வருகிறது.

மதியம் 1 மணியளவில் அபிசேகம் நிறைவு பெற்று சுவாமிக்கு அலங்காரம் நடைபெறும். கட்டளை தாரர்கள் பதிவு செய்வதன் அடிப்படையில் சுவாமிக்கு வெள்ளிக்கவசம், தங்க கவசம், முத்தங்கி, மலர் அங்கி போன்ற அலங்காரம் நடைபெறும். பின்னர் தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

மாலை 6 மணிக்கு சுவாமி உற்சவர், அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் வலம் வந்து தேரோட்டம் நடைபெறும். தங்கத்தேர் இழுப்பதற்காக நாள் ஒன்றுக்கு ஒரு பக்தர் மட்டுமே, ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்ய வேண்டும். நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிசேகம் நடத்துவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதையொட்டி கடந்த ஜனவரி மாதம் முதல் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது. கோவில் உட்பிரகாரத்தில் தடுப்புகள் மற்றும் சாரங்கள் அமைக்கப்பட்டு திருப்பணி வேலைகள் மற்றும் கோவில் சுவர்கள் மற்றும் மேற்கூரையில் வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் தங்கத் தேரோட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறவில்லை.

தற்போது கோவில் உட்பிரகாரத்தில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று சாரங்கள் மற்றும் தடுப்புகள் அகற்றப்பட்டுவிட்டன. இதனால் 9-ந் தேதி முதல் தங்கத்தேர் இழுப்பதற்காக பக்தர்கள் முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது. விருப்பமுள்ள பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து தங்கத்தேர் இழுக்கலாம் என கோவில் உதவி கமிஷனர் இளையராஜா தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News