குமாரபாளையத்தில் தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்திநகர் மன்ற தலைவர் சாலை மறியல்
- அய்யப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது.
- இதன் ஓரமுள்ள பகுதியாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து காணப்படுகிறது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் அய்யப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது. இதன் ஓரமுள்ள பகுதியாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து காணப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நகராட்சி சார்பில் மனு கொடுத்தும், நேரில் சொல்லியும் பலனில்லை. இந்த இடத்தில் பல முறை கார், சரக்கு வாகனம் ஆகியன கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து இது போல் அசம்பாவிதம் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படும் முன்பு இங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில், சேலம் கோவை புறவழிச்சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.
நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், ராஜ், தர்மலிங்கம், ஜேம்ஸ், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த சாலை மறியல் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் கோவை பக்கமிருந்து வந்த வாகனங்கள் பல கி.மீ. தூரம் வரை வரிசையில் நின்றன.