உள்ளூர் செய்திகள்

மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து கலெக்டர் டாக்டர்.உமா, பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் விசாரணை நடத்திய போது எடுத்த படம்.

ஜேடர்பாளையம் அருகே வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்த்த பகுதிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-10-16 08:15 GMT   |   Update On 2023-10-16 08:15 GMT
  • கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகள், வெல்ல ஆலைகள் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்கு தீ வைப்பது, விவசாய கருவிகள், வாழை மற்றும் 3200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
  • மீண்டும் நேற்று முன்தினம் இரவு தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2000-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர்.

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகள், வெல்ல ஆலைகள் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்கு தீ வைப்பது, விவசாய கருவிகள், வாழை மற்றும் 3200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். மேலும் கோவை மண்டல போலீஸ் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ சுகந்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தி இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

மரங்கள் வெட்டி சாய்த்த மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News