புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி நாட்டுக்கோழிகள் விலை சரிவு
- மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
- தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சுல்தான்பேட்டை, மோகனூர் பிரிவு சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது.
இங்கு பரமத்தி, கீரம்பூர், பாலப்பட்டி, பாண்ட மங்கலம், பொத்தனூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இந்த நாட்டுக்கோழிகளை வியாபாரிகள் பலரும் போட்டி போட்டி வாங்கி செல்வர்.
விலை சரிந்தது
தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி விட்ட நிலையில் நாட்டுக்கோழிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ நாட்டுக் கோழி 350 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் நேற்று 300 ரூபாய்க்கு விற்பனையானது.
புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதனால் புரட்டாசி மாதத்தில் பொதுமக்கள் அதிகளவில் அசைவம் உணவு சாப்பிட மாட்டார்கள். அதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் நாட்டுக் கோழிகள் விலை சரிவடைந்தது.
இது குறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை விரும்புவதில்லை .அதனால் நேற்று நடந்த வார சந்தையில் நாட்டுக்கோழிகள் ் விலை சரிந்துள்ளது. தற்போது கோழி விலை குறைவாக உள்ளதால் தற்போது கோழிகளை உயிருடன் வாங்கி வைத்துக்கொண்டு புரட்டாசி முடிந்ததும் பயன்படுத்த அசைவ பிரியர்கள் வாங்கி செல்கின்றனர், என்றனர்.