பரமத்திவேலூர் திருமண விசேஷங்கள் இல்லாததால் வெற்றிலை விலை வீழ்ச்சி
- விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர்.
- பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். இந்த வெற்றிலைகளை பறித்து உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் , பாண்டமங்கலம் ெபாத்தனூர், பரமத்திவேலூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் வெற்றிலை மண்டிகளுக்கும், பரமத்தி வேலூரில் கரூர் செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5000-க்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் சுமை ஒன்று ரூ.5000-க்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.3,500-க்கும் ஏலத்தில் எடுத்து சென்றனர்.
நேற்று முன்தினம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் மார் சுமை ஒன்று ரூ.1,500-க்கும் ஏலம் போனது. நடப்பு மாதத்தில் அதிக அளவில் கோவில் திருவிழா மற்றும் திருமண விசேஷங்கள் நடைபெறாததால் வெற்றிலை தேவை குறைந்து வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.