ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்பு
- பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
- கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வெங்கரையில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. இந்த நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை தனிநபர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து தர கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கோவிலுக்கு சாதகமாக வரப்பெற்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்து சமய அறநிலைய துறையினர் மூலம் நீலகண்டேஸ்வரர் சாமி கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சுந்தர வள்ளி தலைமையில் ஒய்வு பெற்ற தாசில்தார் வரதராஜன், ஆய்வாளர் ஜனனி, வழக்கு ஆய்வாளர் கனகராஜ், செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை அளவீடு செய்தனர். இதில் நீலகண்டேஸ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 1/2 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு எல்லை கற்கள் நடப்பட்டது.