சோழசிராமணியில் பொதுப்பாதையில் கம்பி வேலியை அகற்றக்கோரி பெண்கள் சாலை மறியல்
- 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
- அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சோழசிராமணி அண்ணா நகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதில் அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். அதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள கோவில் நிலம் வழியாக சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த கோவில் இடத்திற்கு தற்போது கம்பி வேலி அமைத்து வழக்கமாக செல்லும் பாதை மறிக்கப்பட்டதால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் செல்ல முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் உடனடியாக அந்த கம்பி வேலியை அகற்ற வலியுறுத்தி ஜேடர்பாளையம்- திருச்செங்கோடு பிரதான சாலையில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ½ மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.