உள்ளூர் செய்திகள்

தமிழக அரசு நெல்லுக்கு அறிவித்துள்ள ஆதார விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தல்

Published On 2023-08-31 07:45 GMT   |   Update On 2023-08-31 07:45 GMT
  • தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது.
  • எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாமக்கல்:

நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2023-–24ம் ஆண்டிற்கு, நெல்லுக்கு உண்டான குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,183 எனவும், சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு, ரூ, 2,203 என மத்திய அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்துள்ளது.

தமிழக அரசு தமிழகத்தில் தற்போது திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு உண்டான ஆதரவு விலையுடன், தமிழக அரசின் ஊக்கத்தொகையாக, சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ. 82 கூடுதலாகவும், சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 107 கூடுதலாகவும் அறிவித்து விலை நிர்ணயம் செய்துள்ளது.

தமிழக அரசு அறிவித்த விலைப்படி, சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,265, சன்னரக நெல் குவிண்டாலுக்கு, ஊக்கத்தொகையுடன் ரூ. 2,310 என, செப். 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

2021 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் நலன் கருதி, நெல்லுக்கு ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டு நடந்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல்லுக்கு உண்டான விலை அறிவிக்காதது, தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக நெல் உற்பத்தி செலவை ஒப்பிடும்போது, வேலை ஆட்கள் கூலி மிகவும் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு அதிகரித்துள்து. மேலும், உரம், மருந்து அதன் மூலப்பொருட்கள் ஏற்றிவரும் வாகன வாடகையும், பல மடங்கு உயர்ந்துள்ளது.

தமிழக விவசாயிகள் நெல் உற்பத்தி செலவினங்களை ஒப்பிடும்போது, தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள, நெல்லுக்கான ஆதார விலையுடன் வ ழங்கும் ஊக்கத்தொகை மிகவும் குறைவாக உள்ளது. எனவே இதை உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News