லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
- நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார்.
- ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாக்கவுண்டம் பாளையம் அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார். வேலையை முடித்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அவர் ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.
இதில் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ரமேஷின் மனைவி தமிழரசி (28), ரமேஷின் தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி, விபத்தில் இறந்த ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர்.
விபத்து பற்றி ரமேஷின் மனைவி தமிழரசி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த ரமேஷுக்கு 2 மகள்கள் உள்ளனர்.