தேசிய அளவிலான செஸ் போட்டி நாமக்கல் அரசு பள்ளி மாணவன் சாம்பியன்
- நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.
- 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாமக்கல்:
மாமல்லபுரத்தில் சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தி முடிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் செஸ் போட்டி பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் மாநில, தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம், ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் நவீன்குமார், சென்னையில் நடந்த மாநில அளவிலான இளையோர் செஸ் போட்டியில், முதலிடம் பெற்றார்.
அதையடுத்து, மும்பையில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டார். அதில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், மகாராஸ்டிரா உள்பட, 17 மாநிலங்களை சேர்ந்த, மாணவ, மாணவியர் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில், செமி பைனலில், மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவரை எதிர்த்து விளையாடிய நவீன்குமார் வெற்றி பெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதி போட்டியில், தமிழக மாணவரை எதிர்த்து விளையாடி, வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
தேசிய அளவில் சாதனை படைத்து, தமிழகத்துக்கும், நாமக்கல் மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்த மாணவர் நவீன்குமாரை, பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் குமார், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ரவி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பள்ளி தலைமை யாசிரியர் ஆன்ட்ரூஸ் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.