கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம்-உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
- நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் குறள் போல நுகர்வின்றி எந்த ஒரு மனிதனுடைய வாழ்வும் அமையாது.
- விழிப்புடனும், விதிமுறைகளினை பின்பற்றி யும் வாங்கிட உறுதி கொள்ள வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலமாக கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.இவ்விழாவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கி பேசியதாவது:-
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது நுகர்வு " நீரின்றி அமையாது உலகு" என்ற வள்ளுவரின் குறள் போல நுகர்வின்றி எந்த ஒரு மனிதனுடைய வாழ்வும் அமையாது. ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்களுக்குத் தேவையானவற்றை விலைக் கொடுத்து, பெற்று அனுபவிப்பதே "நுகர்வு" ஆகும். அப்படிப்பட்ட நுகர்வைச் சந்திக்கும் எல்லா மனிதருமே நுகர்வோர் ஆகிறார்.சந்தைப்படுத்தப்படும் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துபவர் நுகர்வோர் என வரைமுறை செய்யப் படுகிறார். நுகர்வு செயல்பாடு என்பது அதைச் சார்ந்தவர், விற்பனையாளர் மற்றும் பொருளைச் சார்ந்திருக்கிறது. இப்புதிய சட்டத்தில் 3 புதிய பிரிவுகள் புதியதாக சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் பொருட்களில் ஏதேனும் சேதாரம் இருந்து அதனால் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் அது உற்பத்தியாளரின் பொறுப்பாகும். நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படுவது. சமரச மையமும் பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் அனைத்து சரக்கு மற்றும் சேவைகளுக்கும் பொருந்தும். வீடு வாங்குவது, வீடு கட்டுவது , தொலைத் தொடர்பு சேவைகள், ஆன்லைன் மூலம்வாங்கும் பொருட்கள் , டெலி சாப்பிங், நேரடி விற்பனை, மல்டி லெவல் மார்க்கெட்டிங் என அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும். பாதுகாப்பு உரிமை, தேந்தெடுக்கும் உரிமை, தகவல் பெறும் உரிமை, முறையீட்டு உரிமை, நிவாரணம் பெறும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, அடிப்படை தேவைக்கான உரிமை போன்ற உரிமைகள் சட்டபடி வழங்கப்பட்டாலும் அதை நாம் விழிப்போடு பயன்படுத்த வேண்டும்.
நுகர்வோர்கள் குறைகளை தீர்க்க அரசின் சார்பில் நுகர்வோர் சேவை மையம் சென்னையில் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் 3 மாதத்திற்கு ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் அமைப்புகளிடம் நுகர்வோர் நலன் சார்ந்த குறைபாடுகள் கேட்கப்பட்டு தீர்வு காணப்படுகிறது. அதேபோல, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவியர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நுகர்வோர் மன்றங்களின் நோக்கம், இளைஞர்களி டையே நுகர்வோர் உரிமைகள் குறித்த அறிவையும், திறமைகளையும் உருவாக்குவது. பொருட்களின் தரக் கட்டுப்பாடு விதிகள் மற்றும் சந்தையறிவு பற்றி கற்றுக் கொடுப்பது நுகர்வோர் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்த சட்டங்களைப் பயிற்றுவிப்பது. சட்ட விரோதமான வணிக முறைகளால் நுகர்வோர் பாதிக்கப்படுவதை தவிர்ப்பது குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு வளர்ப்பது. நிலைத்த தன்மை வாய்ந்த நுகர்வு முறைகளை பயிற்றுவிப்பதும் அவற்றை அன்றாட வாழ்வில் செயல்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இளைஞர்களிடையே அறிவார்ந்த வாங்கும் திறனை மேம்படுத்துவது. இந்த விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவரும் நுகர்வோர்களே ஆவார். எனவே ஒவ்வொருவரும் பொருட்கள் வாங்கும் போது விழிப்புடனும், விதிமுறைகளினை பின்பற்றி யும் வாங்கிட உறுதி கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார். இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உதயகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் நந்தகுமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர் கைலாஷ்குமார், தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் ராஜசேகரன் மற்றும் நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.