சிவகிரி பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா
- முகாமின் போது மாணவர்கள் ரத்ததான விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல் ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
- நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது.
சிவகிரி:
சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா கடந்த 1-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து சிவகிரி மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உழவாரப்பணி, விஸ்வநாதபேரி பகுதிகளில் ரத்ததான விழிப்புணர்வு முகாம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு முகாம், தகவல் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம், வழிகாட்டுதல் பற்றிய விழிப்புணர்வு முகாம், சட்டம் ஒழுங்கு விழிப்புணர்வு முகாம், மரம் நடுதல், கோம்பை ஆறு படுகையில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கேன்களை அப்புறப்படுத்துவது ஆகிய பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்றுடன் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து பள்ளியின் வளாகத்தில் நிறைவு விழா நேற்று நடைபெற்றது.
சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன், துணைத்தலைவர் மூக்கையா என்ற கலைஞர், பொருளாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரையும் தலைவர், துணைத்தலைவர், செயலாளர், பொருளாளர், கல்விக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பினர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், காசிராஜன், வீரகுமார், மோகன், அருணாசலம், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி இதுபோன்று தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சுபஜோதி நன்றி கூறினார்.
இதில் நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் பாண்டி, கல்வி பணிக்குழு மற்றும் அறப்பணிக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.