உள்ளூர் செய்திகள் (District)

நவராத்திரி விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக வன்னியாசூரனை வதம் செய்யும் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பழனி கோவில் நவராத்திரி விழா வேல் வாங்கும் நிகழ்ச்சியில் குளறுபடி

Published On 2022-10-05 03:58 GMT   |   Update On 2022-10-05 03:58 GMT
  • நவராத்திரி விழா கடந்த மாதம் 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
  • போகர் சன்னதியில் இருந்து மலைக்கோவில் சன்னதிக்கு அழைத்துவர வேல்வாங்கும் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பழனி:

பழனி மலைக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 26-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று உச்சிகால பூஜை மதியம் 12 மணிக்கும், சாயரட்சை பூஜை மதியம் 1.30 மணிக்கும் நடந்தது.

அதன்பின்னர் பழனி ஆதினம், புலிப்பாணி பாத்திரசாமிகளை முறைப்படி போகர் சன்னதியில் இருந்து மலைக்கோவில் சன்னதிக்கு அழைத்துவர வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அப்போது புலிப்பாணி பாத்திரசாமிகளைமுறைப்படி கோவில் கண்காணிப்பாளர் அழைத்துவரவேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

கோவில் நிர்வாகம் சார்பில் பேஷ்கார் அழைத்து வருவார் என தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவில் கடைபிடிக்கப்படும் முறையை மாற்றுவது ஏன்? விழாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து இணைஆணையர் நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன்பின் டி.எஸ்.பி சிவசக்தி தலைமையில் போலீசார் உதவியுடன் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை கோதைமங்கலம் கோவிலில் வன்னியாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அப்போது இணைஆணையர் நடராஜன் தாமதமாக வந்ததால் பக்தர்கள் மீண்டும் வாக்குவாதம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் அதிகாரிகள் இல்லாததால் சம்பிரதாயத்திற்காக 4 திசைகளிலும் அம்பு போடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு விழா நிறைவடைந்தது.

Tags:    

Similar News