உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது: பழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா

Published On 2023-10-15 05:38 GMT   |   Update On 2023-10-15 05:38 GMT
  • பழனியில் நவராத்திரி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
  • 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது.

பழனி:

முருகபெருமானின் 3ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா வெகுசிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இன்று காலை கிழக்கு ரதவீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் முதலில் காப்பு கட்டப்பட்டது. கோவிலில் உள்ள அம்மன், முருகன், வள்ளிதெய்வானை ஆகியோருக்கும் கோவில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து மலைக்கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையின் போது முருகப்பெருமான், வள்ளி தெய்வானை, துவார பாலகர்கள், வாகனங்கள் ஆகியவற்றிற்கு காப்பு கட்டப்பட்டது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினந்தோறும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள், 7 மணிக்கு அலங்காரம் நடைபெறும்.

கோவில் வளாகத்தில் கொலு அமைக்கப்பட்டு தினந்தோறும் வெவ்வேறு அம்மன்கள் அலங்காரம் செய்யப்படும். 9ம் நாள் விழாவாக வருகிற 23ம் தேதி மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, மதியம் 3 மணிக்கு பராசக்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலை வந்தடையும். அதன்பின் தங்க குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலை சாமி வந்தடைந்து பராசக்திவேல் மலைக்கோவில் அடைந்த பின்பு அர்த்தசாம பூஜை நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்றுமுதல் வருகிற 23ம் தேதி வரை மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என்றும், 24ம் தேதி முதல் தங்கரத புறப்பாடு மீண்டும் புறப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News