கடலூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 4 பேர் கைது பொது மக்கள் மடக்கி போலீசில் ஒப்படைத்தனர்
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி பெரிய காட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காடீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இன்று அதிகாலை கோவிலில் இருந்து சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.அப்போது பெரியக்காட்டுபாளையம் பகுதியில் திடீரென்று மின்சார தடை ஏற்பட்டு இருந்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வந்தனர். அப்போது கோவிலில் இருந்து தொடர்ந்து சத்தம் கேட்டு வந்ததால், சந்தேகம் வந்த பொதுமக்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் கொண்ட கும்பல் உடைத்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 4 பேரை பிடிக்க முயன்றனர். ஆனால் 4 நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.இதனை தொடர்ந்து ரெட்டிச் சாவடி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சென்னை கோட்டூர்புரம் சேர்ந்தவர்கள் கரண் (வயது 18), செல்வம் (வயது 24), சூரிய பிரகாஷ் (வயது 18) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. மேலும் இவர்கள் சென்னையிலிருந்து பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு சென்றதாகவும், அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.