வாக்கி டாக்கிகள் பழுதால் பரிதவிக்கும் நெல்லை மாநகர போலீசார்
- நெல்லை மாநகர பகுதியில் மொத்தம் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கும் தலா 10 வாக்கி டாக்கிகள் வீதம் 80 எண்ணங்கள் பயன்பாட்டில் உள்ளது.
- பெரும்பாலான நேரங்களில் இந்த வாக்கி டாக்கிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை.
நெல்லை:
தமிழகத்தில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தப்பிச்செ ல்லும் குற்றவாளிகள் குறித்தும், போக்குவரத்து நெருக்கடிகள் உள்ளிட்ட பிரச்சினை கள் குறித்தும் உடனடியாக போலீ சார் தங்களுக்குள் பேசி கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வசதியாக இருக்கும் ஒரு தொடர்பு சாதனமாக வாக்கி டாக்கி பயன்பட்டு வருகிறது.
வாக்கி டாக்கி
நெல்லை மாவட்டத்திலும் வாக்கி டாக்கியின் பயன்பாடு மிகவும் தேவையானதாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள 38 போலீஸ் நிலையங்கள், புறக்காவல் நிலையங்கள், போக்குவரத்து போலீஸ் என 500-க்கும் மேற்பட்ட வாக்கி டாக்கிகள் செயல்பட்டு வருகிறது.
இதுதவிர மாநகர பகுதியில் மொத்தம் உள்ள 8 போலீஸ் நிலையங்களுக்கும் தலா 10 வாக்கி டாக்கிகள் வீதம் 80 எண்ணங்கள் பயன்பாட்டில் உள்ளது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சுமார் 27 இடங்களில் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் 30 வாக்கி டாக்கிகள் உள்ளன. இவைகள் போக சிறப்பு பிரிவுகளான குற்ற ஆவண பிரிவு, மதுவிலக்கு, ரோந்து வாகனங்கள் என 40 வாக்கி டாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறாக மாநகரில் மட்டும் சுமார் 150 வாக்கி டாக்கிகள் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், இவை அனைத்துமே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக வழங்கப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை பழுதடைந்து காணப்படு கிறது. இதனால் ரப்பர், கயிறு, பசை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறோம்.
ஆப்சென்ட்
பெரும்பாலான நேரங்களில் இந்த வாக்கி டாக்கிகளில் சரியாக நெட்வொர்க் கிடைப்பதில்லை. அந்த நேரங்களில் உயர் அதிகாரிகள் எங்களை தொடர்பு கொள்ளும்போது எங்களால் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளமுடிய வில்லை.
இதனால் நாங்கள் அந்த இடங்களில் இல்லை என்று கூறி எங்களுக்கு ஆப்சென்ட் செய்து விடப்போவதாக உயர்அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்கி டாக்கி பழுதுக்கு நாங்கள் என்ன செய்வது? என்று விரக்தியாக தெரிவித்தார்.
போக்குவரத்து சிக்னல்
மாநகர பகுதியில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக காலை 7 மணி முதல் சுழற்சி முறையில் காவலர்கள் பணியாற்றுவார்கள். ஆனால் சமீப காலமாக அனைத்து சிக்னல்களிலும் காலை 6 மணி முதல் பணியில் இருக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
காலை 8 மணிக்கு பிறகே பெரும்பாலும் சாலைகளில் போக்குவரத்து அதிகரிக்கும். ஆனால் கமிஷனர் 6 மணிக்கு அந்தந்த சிக்னல்களில் நிற்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் எங்களது குடும்பத்தினருக்கு சமையல் செய்வது, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது உள்ளிட்டவற்றை செய்ய முடியவில்லை என்று மனவேதனையுடன் பெண் போலீசார் கூறுகின்றனர்.