உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை விரைவாக திறக்க வேண்டும்-பூ மார்க்கெட் வியாபாரிகள் மேயரிடம் மனு

Published On 2022-10-18 09:16 GMT   |   Update On 2022-10-18 09:16 GMT
  • மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
  • பூ கமிஷன் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் எல்ஐசி பேச்சிமுத்து தலைமையில் திரண்டு வந்து மனு அளித்தனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் துணை மேயர் ராஜு, மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கலங்கலான குடிநீரை தண்ணீர் பாட்டிலில் எடுத்து வந்து மேயரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்குட்பட்ட 9-வது வார்டில் கோட்டூர் ரோடு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பல மாதங்களாக குடிநீர் சரிவர வருவதில்லை. அவ்வாறு வந்தாலும் சாக்கடை கழிவுகள் கலந்தபடி மிகவும் கலங்கலாக குடிநீர் வருகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். மேலும் சாக்கிய நாயனார் தெரு, கோட்டூர் ரோடு முப்புடாதி அம்மன் கோவில் மேல தெரு மற்றும் கீழே தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் சரிவர எரிவது இல்லை. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் அந்த வழியாக பெண்கள் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே அந்த தெருக்களில் உடனடியாக மின் விளக்குகளை சரி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

நெல்லை மாவட்ட மொத்த பூ கமிஷன் உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் தி.மு.க வர்த்தக அணி நிர்வாகி எல்ஐசி பேச்சிமுத்து தலைமையில் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சந்திப்பு கெட்வெல் பூ மார்க்கெட் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட கடைகளும், வணிக வளாகம், கோவில் உள்ளிட்டவையும் உள்ளது. இங்கு மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். இந்த பகுதிக்கு சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து சாலை வசதி உள்ளது. இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து இருபுறமும் மின் கம்பங்கள் மூலமாக மின் விளக்குகள் அமைத்து தர வேண்டும். மேலும் மார்க்கெட்டில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சந்திப்பு பஸ் நிலையத்தை விரைவாகத் திறந்து வியாபாரிகள் சிரமமின்றி பூ மார்க்கெட்டுக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Tags:    

Similar News