இந்திய அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டிக்கு நெல்லை பல்கலைக்கழக அணி தகுதி
- போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆண்கள் ஆக்கி அணி 2-வது இடம் பிடித்தது.
- வெற்றி பெற்ற அணியினரையும், ஆக்கி வீரர் கார்த்திக்கையும் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார்.
நெல்லை:
தெற்கு மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆண்கள் ஆக்கி போட்டி கடந்த மாதம் 6 நாட்கள் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் 68 பல்கலை கழகங்களை சேர்ந்த ஆண்கள் ஆக்கி அணிகள் பங்கு பெற்றன. இந்த போட்டியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஆண்கள் ஆக்கி அணி 2-வது இடம் பிடித்து வெற்றிக் கோப்பையினை கைப்பற்றியது.
இதன் மூலம் அடுத்த மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும் கோவில்பட்டியை சேர்ந்த ம.சு.பல்கலைக் கழக விளையாட்டு வீரர் கார்த்திக் அண்மையில் ஆசிய அளவில் நடைபெற்ற பல்கலைக் கழகத்திற்கு இடையேயான போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற அணியினரையும், ஆக்கி வீரர் கார்த்திக்கையும் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டினார். மேலும் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அவர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் போது பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை, நிதி அலுவலர் மரிய ஜோசப், விளையாட்டு மைய இயக்குநர் ஆறுமுகம், பல்கலைக் கழக அணி மேலாளர் குருசித்ர சண்முக பாரதி, பல்கலை கழக உடற்கல்வி, விளையாட்டுத்துறை உதவி பேராசிரியர் தங்கராஜ், கோவில்பட்டி ஆண்கள் சிறப்பு விடுதி ஆக்கி அணி பயிற்சியாளர் முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை பாராட்டினர்.