ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவின் நிறைவாக நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி
- நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது.
- 3 நாட்கள் காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருக்கல்யாணம்
15 நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கடந்த 9-ந் தேதி, கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 3 நாட்கள் காந்திமதி அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
திருவிழாவின் 15-ம் நாளான நேற்று காலை பூமாலையால் சுவாமி பல்லக்கை இணைத்து அம்பாள் பல்லக்கு செல்லும் அபூர்வ காட்சி நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாளுக்கு பொற்றாமரை குளத்தில் தீா்த்தவாாி நடைபெற்றது.
மறுவீடு பட்டினப்பிரவேச நிகழ்ச்சி
இரவில் சுவாமி நெல்லை யப்பர் அன்னை காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாள் சன்னதியில் இருந்து சுவாமி சன்னதிக்கு எழுந்தருளும் மறுவீடு பட்டினப்பிரவேச நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நடைபெறும்.
அம்பாள் சன்னதியில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் குடவருவாயில் தீபாராதனையும், அதனைத் தொடர்ந்து நான்கு ரத வீதியில் சுவாமி, அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதியில் எழுந்தருளிய சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு மறுவீட்டு பலகாரங்கள் சீர் பரத்தல் செய்யப்பட்டு நலுங்கு இட்டு மாலை மாற்றி சோடச உபசரனைகள் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சுவாமி, அம்பாள் அனவரததானநாத மண்டபத்தில் சேர்க்கை யுடன் இந்த வருட ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நிறைவுபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.