மானூரில் புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரி; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
- தமிழகம் முழுவதும் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- நெல்லை மாவட்டத்தில் மானூர் தாலுகாவில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் 20 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணெலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்டத்தில் மானூர் தாலுகாவில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளத்தில் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி திறப்பு விழா காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட சுற்றுச்சூழல் அணி தி.மு.க. அமைப்பாளர் அமிதாப், கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கர், கல்லூரி முதல்வர் வனஜா, மானூர் யூனியன் தலைவர் ஸ்ரீலேகா அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மானூரில் புதிதாக அமைய உள்ள இந்த அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரிக்கு மதவக்குறிச்சி ஊராட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ரூ.11.33 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
அதுவரையிலும் தற்காலி–கமாக மேலப்பிள்ளையார்குளம் பள்ளி வளாகத்தில் கல்லூரி செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகள் தொடங்கப்படுகிறது.
இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கல்லூரியில் 288 மாணவ-மாணவிகள் படிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரிக்கு அடுத்த படியாக நெல்லை மாவட்டம் மானூரில் 2-வதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படுகிறது.