தஞ்சை மூலை அனுமார் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
- அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம்.
- 18 வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோவிலில் பிரதி அமாவாசை தோறும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரங்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் ஆடி மாதம் இரண்டு அமாவாசைகள் வருகிறது. இன்று முதல் அமாவாசையும் , ஆகஸ்ட் மாதம் 16-ம்தேதி இரண்டாவது அமாவாசை அன்று ஆடி அமாவாசையாக நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஆடி மாதம் முதல் அமாவாசையையொட்டி காலையில் லட்ச ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் அபிஷேகம், சிறப்பு பாலாபி ஷேகம் அலங்காரம் தீபாரா தனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்கு சிறப்பு அலங்காரமும் அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் வரும் நிகழ்ச்சியும் 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.
வருகின்ற ஆகஸ்ட் 16-ம்தேதி இக்கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு நடைபெறும் எலுமிச்சை பழங்களான சிறப்பு அலங்காரத்திற்கு பக்தர்கள் எலுமிச்சை பழங்கள் வாங்கி தந்து மூலை அனுமாரின் அருளை பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா , கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை கைங்கர்யம் குழுவினர் செய்து வருகின்றனர்.