பலத்த காற்றுடன் தொடர் மழை கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- நேற்று காலை முதல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நனைந்தவாறே சென்றனர்.
- பலத்த காற்று காரணமாக கூக்கால் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய தோட்டங்களில் மின் கம்பங்கள் விழுந்ததில் பயிர்கள் சேதமடைந்தது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை முதல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சாரல் மழையில் நனைந்தவாறே சென்றனர். மேலும் அலுவலர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
பலத்த காற்று காரணமாக கூக்கால் கிராமத்தில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் விவசாய தோட்டங்களில் மின் கம்பங்கள் விழுந்ததில் பயிர்கள் சேதமடைந்தது. மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருவதால் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், கும்பூர், கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் இருளிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.