கோவையில் ரூ.7 லட்சம் நகைகளுடன் வடமாநில தொழிலாளி மாயம்
- தங்க நகைகளை செய்து கொடுக்காமல் தனது கடையை பூட்டிவிட்டு மாயமாகிவிட்டார்.
- ரூ.7 லட்சம் மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளுடன் மாயமான பிரதீப் போலோவை தேடி வருகிறார்கள்
கோவை:
கோவை பொன்னயராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் அந்த பகுதியில் தங்க நகைப்பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த மாதம் 25-ந்தேதி தன்னிடம் உள்ள 72 கிராம் தங்கத்தை நகைகளாக செய்வதற்கு கே.ஜி வீதியில் தங்க நகைக்கூடம் வைத்து நடத்தி வந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரதீப் போலோ என்பவரிடம் கொடுத்தார்.
ஆனால், அவர் தங்க நகைகளை செய்து கொடுக்காமல் தனது கடையை பூட்டிவிட்டு மாயமாகிவிட்டார். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
அக்கம்பக்கத்தில் விசாரித்த போது பிரதீப் போலோ ஏற்கனவே திலீப் என்பவரிடம் இருந்து 35 கிராம், சூரிய நாராயணன் என்பவரிடம் இருந்து 65 கிராம் தங்கத்தை பெற்று அவர்களையும் ஏமாற்றிவிட்டு மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்து ஆனந்தகுமார் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.7 லட்சம் மதிப்பிலான 21 பவுன் தங்க நகைகளுடன் மாயமான பிரதீப் போலோவை தேடி வருகிறார்கள்.