கோவையில் வடமாநில தொழிலாளி மீது தாக்குதல்
- 17 வயது சிறுவன் குடிபோதையில் அறைக்கு வந்தார்.
- வட மாநில தொழிலாளியை தாக்கிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
கோவை
சிதம்பரத்தை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 51). இவர் கோவை வெள்ளலூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிந்துகுமார் (23) உள்பட 84 வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று கட்டுமான நிறுவனத்தில் காவலாளி பிந்து குமாரை காவலாளி அறையில் இருக்க வைத்து விட்டு ரோந்து சென்றார். அப்போது அதே கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்க்கும் 17 வயது சிறுவன் வெளியே சென்று விட்டு குடிபோதையில் அறைக்கு சென்றார். அப்போது காவலாளி அறையில் இருந்த பிந்துகுமார் இந்தியில் விசாரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த சிறுவன் தான் வைத்து இருந்த பீர் பாட்டிலால் வடமாநில தொழிலாளியை தாக்கினார். இதனை தடுக்க முயன்ற போது பிந்துகுமாரின் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிறுவன் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து வடமாநில தொழிலாளர்கள் மேஸ்திரி புகழேந்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக நிறுவனத்துக்கு விரைந்து சென்று பிந்துகுமாரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடமாநில தொழிலாளியை தாக்கிய 17 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.