சரவணம்பட்டியில் வடமாநில வாலிபர் கீழே விழுந்து பலி
- விளாங்குறிச்சி பகுதியில் தங்கி அந்த பகுதியில் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களிடம் மதுவை வாங்கி குடித்தார்.
சரவணம்பட்டி,
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பில்ட் ராம் (வயது 27). கட்டிடத் தொழிலாளி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் விளாங்குறிச்சி பகுதியில் தங்கி அந்த பகுதியில் நடந்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை 11 மணியளவில் பில்ட் ராம் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். டாஸ்மாக் கடை மூடி இருந்ததால் அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களிடம் மதுவை வாங்கி குடித்தார்.
பின்னர் போதை தலைக்கேறிய நிலையில் வெளியே வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு கும்பலுக்கும், பில்ட்ராமுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பில்ட்ராமை கீழே தள்ளினர். இதில் நிலைகுலைந்த அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு கிடந்த கல்லில் அவரது தலை பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கீழே தள்ளி விட்டதில் இறந்த வட மாநில வாலிபர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.