கடலூர் மாவட்டத்தை கலக்கிய பிரபல கொள்ளையர்கள் சிக்கினர்: பரபரப்பு தகவல்கள்
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இவர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. மேலும், கொள்குளை சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுப்பெற்றது இந்நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் துணை போலிஸ் சூப்பரண்டு கரிகால் பாரிசங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். கோவில்களின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்கள் வேளாங்கண்ணி பகுதியில் தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி தலைமையில் போலீசார் வேளாங்கண்ணிக்கு விரைந்து சென்றனர். அங்கு 2 வாலிபர்களை போலீசார் பிடித்து அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர் கடலூர் சிங்காரத்தோப்பு சேர்ந்த விக்னேஷ் (வயது 23), கடலூர் முதுநகர் சேர்ந்த பிரகாஷ் (வயது 22) என்பது தெரியவந்தது. இவர்கள் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே மாரியம்மன் கோவிலில் சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தி உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம், விருதாச்சலம், புதுச்சேரி மாநிலம் முள்ளோடை, காரைக்கால், நாகப்பட்டினம், பழனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதும் போலீசாருக்கு தெரியவந்தது. மேலும் 2 வாலிபர்களும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரிந்தது .
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே 2 வாலிபர்கள் கோவில் பூட்டை உடைத்து திருடுவதற்கு வந்தபோது, அங்கு நாய்கள் தொல்லை அதிகமாக இருந்ததால் பயத்தில் அதிகாலை 3 மணி அளவில் சாலை ஓரத்தில் இளம் பெண் நின்று கொண்டிருந்தார். அப்போது இவர்கள் திருடுவதற்கு குறிக்கீடாக இருப்பதால் சாலை ஓரத்தில் இருந்த இளம்பெண்ணை தங்களது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று சாலையில் இறக்கி விட்டு, மீண்டும் கோவிலுக்கு வந்து திருடி சென்ற சுவாரசிய சம்பவம் தெரியவந்துள்ளது. எங்கெங்கு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கலக்கி கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.