பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
- மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன
- முறையாக இல்லாத பள்ளி வாகனங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
தமிழகம் முழுவதும் கடந்த 13ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி பேருந்துகளை ஆண்டுதோறும் வட்டார போக்குவரத்து துறை சார்பில் ஆய்வு செய்வது வழக்கம்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 46 தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் 272 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி இன்று காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட பள்ளி வாகனங்களை காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் கனிமொழி, வட்டார போக்குவரத்து அலுவலர் தினகரன், தலைமையிலான குழுவினர் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா, வாகன இன்சுரன்ஸ், வாகன ஓட்டுநர் உரிமம், வாகன உரிமம், பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசர வழி, உள்ளிட்டவைகளை முறையாக உள்ளதா என ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது முறையாக இல்லாத பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் சரி செய்து கொண்டு வருமாறு அனுப்பி வைக்கப்பட்டது.