குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா முன்னேற்பாடு குறித்து அதிகாரிகள் ஆய்வு
- இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வு கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா மிகவும் விமர்சை யாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 24-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹார விழா நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி மாலை 4 மணிக்கு கொடி இறக்கம் நடக்கிறது.விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், கழிப்பறை வசதிகள், வாகன நிறுத்தம் குறித்து தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை தக்காரும், உதவி ஆணையருமான சங்கர் தலைமையில் ஆய்வு பணி நடந்தது.
இதில் பக்தர்கள் தங்குவதற்கு கடற்கரை மற்றும் புதுத்தெரு பைபாஸ் பகுதியில் பக்தர்கள் ஓய்வு கூடம் இந்த ஆண்டு அமைக்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் குலசேகரன்பட்டினம் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன நிறுத்தம் செய்வதற்கு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிர மணியன், கோவில் ஆய்வாளர் பகவதி, கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.