உள்ளூர் செய்திகள் (District)

கெட்டுப்போன பலாப்பழங்கள் பினாயில் ஊற்றி அழிப்பு

Published On 2024-06-23 03:55 GMT   |   Update On 2024-06-23 03:55 GMT
  • ஒரு கடையில் கெட்டுப்போன சுமார் 500 கிலோ பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • செயற்கை ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

கடலூர்:

பண்ருட்டி பகுதியில் கெட்டுப்போன பலாப்பழங்கள் விற்கப்படுவதாக கடலூர் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, காந்தி ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள பழக்கடைகளில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், நல்லதம்பி, சந்திரசேகரன், சுந்தரமூர்த்தி ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் கெட்டுப்போன சுமார் 500 கிலோ பலாப்பழம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 500 கிலோ பலாப்பழங்களை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.

அதனை தொடர்ந்து ஓட்டல்களில் நடத்திய ஆய்வில் குளிர்பதன நிலையில் வைக்கப்பட்டிருந்த பரோட்டா 5 கிலோ, சிக்கன் கிரேவி 2 கிலோ, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 5 கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கெட்டுப்போன பழங்களை விற்ற 4 கடைகளுக்கும், குளிர்பதன நிலையில் வைத்து உணவு பொருட்களை விற்பனைசெய்த 2 ஓட்டல்களுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் மாம்பழ கடைகள் மற்றும் மாம்பழக் குடோன்களில் ஆய்வு செய்ததில், கெட்டுப்போன 25 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், செயற்கை ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags:    

Similar News