உள்ளூர் செய்திகள்

75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 1 லட்சம் தேசியக்கொடி வழங்கும் திட்டம்- மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு

Published On 2022-08-07 08:29 GMT   |   Update On 2022-08-07 08:29 GMT
  • அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் முற்றிலும் இலவச சேவையுடன் சர்வதேச தரத்திலான நவீன கழிவறைகள் அமைக்கப்படுகிறது.
  • 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பத்திற்கு தேசியக் கொடி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி தமிழகம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சியானது மக்களுக்கான மாநகராட்சி யாக திறம்பட செயல்பட்டு வருகிறது.

தற்போது மாநகரின் எதிர்கால நலன் மற்றும் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் முழுமையாக செய்து கொடுத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அதற்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியை குப்பைகள் இல்லாத மாநகராட்சியாக மாற்றிட அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலான பணிகள் நாள்தோறும் தவறாமல் நடைபெற்று வருகிறது.

மேலும் மாநகராட்சியின் 15-வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாநகரிலுள்ள முக்கிய இடங்களிலும், அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்களில் முற்றிலும் இலவச சேவையுடன் சர்வதேச தரத்திலான நவீன கழிவறைகள் அமைக்கப்படுகிறது. இந்த நவீன கழிவறைகள் முதல் கட்டமாக இரண்டு இடங்களில் அமைக்கப்பட இருக்கிறது. நமது இந்திய திருநாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் உள்ள 1 லட்சம் குடும்பத்திற்கு தேசியக் கொடி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தூத்துக்குடி மாநகரில் நாளை (திங்கட் கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது. வார்டு வாரியாக பணியாளர்கள் வீடுவீடாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News