தேசிய நூலக வாரவிழாவையொட்டி போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்
- பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
- 6 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்கள் சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் கொடுத்தனர். இதில் மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வருவாய்த்துறையில் பணிபுரிந்து, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார். மேலும், தேசிய நூலக வாரவிழாவையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து ராஜாராம்மோகன்ராய் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, நூலகர்கள் சாந்தி, பிரேமா, நூலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார், வாசக வட்ட தலைவர் கமலேசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.