உள்ளூர் செய்திகள்

காணும் பொங்கலையொட்டி கோவையில் சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

Published On 2023-01-17 09:32 GMT   |   Update On 2023-01-17 09:32 GMT
  • திருமணம் கைகூட கன்னி பெண்கள் விரதம் இருப்பது வழக்கம்.
  • கூட்டம் அதிகளவில் இருந்தது.

கோவை,

கோவையில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நேற்று மாட்டு பொங்கலை யொட்டி கால்நடைகளை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, பூஜை செய்து வணங்கினர்.

மேலும் காந்தி பார்க் அருகில் உள்ள கோவிலுக்கு கால்நடைகளை அழைத்து வந்து பூஜை செய்தனர். இதனை காண ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிதனர். இன்று பொங்கல் விழாவின் கடைசி நாளான காணும் பொங்கல் கடைப்பிடிக்கப்பட்டது.

காணும் பொங்கலில் வீட்டில் உள்ள எல்லோரும் இணைந்து வெளியில் சென்றால் தான் பொங்கல் கொண்டாட்டம் நிறைவு பெரும். வீட்டில் சமைத்து அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சிலர் சென்று வருவர். பொங்கல் அன்று சமைத்த சாதத்தை முன்னோர் நன்மைக்காகவும், உடன்பிறந்தோர் நலனுக்காகவும் காகம், குருவி போன்ற பறவைகளுக்கு அளிக்க வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு.

திருமணம் கைகூட கன்னி பெண்கள் விரதம் இருப்பதும் காணும் பொங்கலில் வழக்கம்.

ஆனாலும், கோவிலுக்கு செல்வதும், சுற்றுலா செல்வதும் மனதிற்கு இதம் அளிக்கும் என்பதாலும், இன்றுடன் பள்ளி கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் விடுமுறை முடிய உள்ளதாலும் மக்கள் குடும்பத்தினருடன் வெளியே சென்று வந்தனர்.

இதையடுத்து இன்று கோவையின் முக்கிய இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அலை மோதியது.

வ.உ.சசி சிறுவர் பூங்காவில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர்.

அங்கு குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். வாலாங்குளத்தில் படகு இல்லத்தில் குவிந்த மக்கள் படகு சவாரி செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று கோவை உக்கடம் குளக்கரை, வேளாண்பல்கலைகழகம் பூங்கா, கோவை குற்றாலம் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது.

ஆன்மிக தலங்களான மருதமலை கோவில், பேரூர் கோவில், புலயகுளம் விநாயகர் கோவில், பொள்ளாச்சியை அடுத்த மாசாணியம்மன் கோவில், உள்பட பல கோவில்களில் மக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.இதையடுத்து மாநகர ோபலீசார் சார்பில் கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News