பாளையில் ஒரு லோடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை-மார்க்கெட் கட்டிட கழிவுகளை லாரிகளில் திருடி விற்றவர் கைது
- கட்டிட கழிவுகள் முழுவதும் பாளையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டது.
- மண் அள்ளி விற்பனை செய்த மாரியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளை சமாதான புரத்தில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அதனை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அங்கிருந்த கடைகள் அருகிலேயே தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
கட்டுமான பணி
தொடர்ந்து பழைய கடைகள் அனைத்தும் முழுமையாக இடிக்கப்பட்டு அந்த கட்டிட கழிவுகள் முழு வதும் பாளை அம்பேத்கர் காலனியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் கொட்டப்பட்டது. அதன்பின்னர் தற்போது மார்க்கெட் கட்டு மான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் மண் குவியல் அளவு குறைந்து வருவதாக பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, பாளை மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து விடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்த உத்தர விட்டார்.
போலீசில் புகார்
அதில், மர்ம நபர்கள் சிலர் லாரியில் மண் குவியல்களை அள்ளிச்சென்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பாளை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் பாளை கே.டி.சி.நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்த மாரி என்ற மணல்மாரி மற்றும் அவரது கூட்டாளிகளான அனவரதநல்லூரை சேர்ந்த ராமர், வல்லநாடு அருகே மணக்கரையை சேர்ந்த செந்தில் ஆகியோர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் லாரிகளில் மண் லோடுகளை அள்ளி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாரியை போலீசார் கைது செய்தனர். ஜே.சி.பி., லாரி யை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர், செந்தில் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.