உள்ளூர் செய்திகள் (District)

தொடர் மழையால் குண்டும், குழியுமாக மாறிய ஊட்டி எச்.எம்.டி. சாலை

Published On 2023-05-08 09:52 GMT   |   Update On 2023-05-08 09:52 GMT
  • சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பயணிகள் அவதி அடைந்தனர்
  • குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதியில் இந்த சுகாதார சீர்கேடால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

ஊட்டி,

ஊட்டி எச்.எம்.டி. சாலை மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. பஸ் நிலையத்தில் இருந்து குன்னூர் சந்திப்பு சாலைக்கு செல்வதற்கு, நகருக்குள் செல்லாமல் இந்த வழியாக சென்றால் சீக்கிரம் போகலாம் என்ற எண்ணத்தில் வரும் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி தவிக்கின்றனர்.

இதேபோல் ரோஜா பூங்கா செல்லும் பயணிகளும் இந்த வழியாக சென்று அவதியின் உச்சத்தை அடைகின்றனர். ரோஜா பூங்கா சந்திப்பில் சாலையின் நடுவே பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்ததில் அதில் செடியை நட்டு வைத்து உள்ளனர்.

எச்.எம்.டி சதுக்கத்தில் நொண்டிமேடு செல்லும் முகப்பு பகுதியில் குப்பை கழிவுகளால் சுகாதார சீர் கேடு காணப்படுகிறது. மேலும் துர் நாற்றம் வீசுகிறது.

வாகனங்கள் செல்ல முடியாத அந்த சாலையில் நடந்து செல்லவே பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர்.

சிறுது தூரம் சென்றால் கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதியில் இந்த சுகாதார சீர்கேடால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

மாத கணக்கில் இதே நிலை தொடர்கிறது என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிறிது தூரம் சென்றால் குளம் போல் நீர் தேங்கி வாகன ஓட்டிகளை பயமுறுத்துகிறது. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரிய சாகசமே செய்யும் நிலை ஏற்படுகிறது.

சிறிது தடுமாறினாலும் ஆபத்தில் முடியும் பயநிலை காணப்படுகிறது. கொஞ்சம் போனால் அங்கிருந்து குன்னூர் சாலை செல்லும் வரை சாலை பள்ள மேடாய் இருக்கிறது. மொத்தத்தில் ஊட்டி எச்.எம்.டி சாலையில் பயணம் செய்வது மறக்க முடியாத அனுபவமாய் அமைகிறது.

Tags:    

Similar News