சேலம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டருக்கு உத்தரவு
- சேலம் அரசு கலைக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
- சென்னை வருவாய் நிர்வாக ஆணையரான கூடுதல் தலைமை செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் அரசு கலை கல்லூரி 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வரும் இந்த கல்லூரி சேலத்தின் அடையாள சின்னங்களில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த கல்லூரியில் கழிப்பிட வசதிகள், குடிநீர், சாக்கடை வசதி , பழுதடைந்த மின் விளக்குகள், மற்றும் கட்டிடங்கள் குறித்தும், புதிய பாடப்பிரிவுகள், கட்டிடங்கள், பேராசிரியர்கள் பணியமைப்பு ஆகியவைகள் குறித்து சேலம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் பல்வேறு துறை அலுவலர்களுடன் குழு அமைத்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் புவனேஸ்வரி என்பவர் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை மனு வழங்கினார். அதன் அடிப்படையில் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரின் செயலகம் சேலம் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே தொடர்புடைய அலுவலர்களை ஒருங்கிணைத்து கூட்டாய்வு மேற்கொள்வதுடன் அந்தந்த துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன் அறிக்கையினை சமர்பிக்குமாறு சேலம் மாவட்ட கலெக்டருக்கு சென்னை வருவாய் நிர்வாக ஆணையரான கூடுதல் தலைமை செயலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.