உள்ளூர் செய்திகள்

பாலக்காடு பல்லசேனா மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின விழா

Published On 2022-06-26 09:54 GMT   |   Update On 2022-06-26 09:54 GMT
  • 700 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் உள்ளது.
  • 4-ந் தேதி இரவு 8 மணிக்கு சிறுவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், 6-ந் தேதி இரவு சினிமா பின்னணி பாடகர் ஸ்ரீ பிரணவம் சசியின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும்

கோவை :

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பல்லசேனா கிராமம். இங்கு சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேல் பழமைவாய்ந்த மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பழையகாவு பகவதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

சிறப்பு வாய்ந்த மீன்குளத்தி பகவதி அம்மனை ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்ததால் அந்த நாள் அம்மனின் பிறந்த நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதே போன்று இந்த ஆண்டும் பல்லசேனாஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மனின் பிரதிஷ்டா தின திருவிழா உற்சவம் வருகிற ஜூலை 9-ந் தேதி நடக்கிறது.

விழாவையொட்டி வருகிற 6, 7,8,9 ஆகிய தேதிகளில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. முன்னதாக 4-ந் தேதி இரவு 8 மணிக்கு சிறுவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், 5-ந் தேதி இரவு மியூசிக் சக்ரா நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு சினிமா பின்னணி பாடகர் ஸ்ரீ பிரணவம் சசியின் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 7-ந் தேதி இரவு செம்மீன் பாண்டும், ஆட்டம் கலா சமிதியின் கலை நிகழ்ச்சிகள், 8-ந் தேதி இரவு ஸ்டார் நைட் மெகா ஷோ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து 9-ந் தேதி காலை 7 மணிக்கு கஜ பூஜையும், யானையூட்டும் நிகழ்ச்சி மற்றும் மூலஸ்தானமான கொடுமந்தில் வரவு சிறப்பு பஞ்சவாத்தியம் மற்றும் தாலப்பொலி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு கலபாட்டம், ஸ்ரீ பூதபலி, பஞ்சாரிமேளத்துடன் பிரதிஷ்டா தின விழா நடைபெறுகிறது.

பிரதிஷ்டை தின விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மகா அன்னதானம் நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு பத்மஸ்ரீ மட்டனூர் சங்கரன் குட்டி மாரார் தலைமையில் மேளம், குடை மாற்றம் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு வெட்டி கட்டு நிகழ்ச்சியும், 9 மணிக்கு பின்னணி பாடகர் உன்னி மேனன் குழுவினரின் திரைப்பட இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது.

இந்த கோவில் கேரள பாணியில் அற்புதமாக கட்டப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு திசையில் நுழைவாயில்கள் உள்ளன. கோவிலையொட்டி பெரிய தீர்த்தக் குளமும் உள்ளது. சோழ தேசத்து குடும்பத்தினருக்கு அடைக்கலம் தந்து வியாபாரத்தையும் செழிக்கச் செய்தவள் என்பதால் இங்கு வந்து பிரார்த்தித்தால் தொழில் சிறக்கும் என்பது நம்பிக்கை. இதனால் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்துறையினர் தங்கள் தொழில் சிறப்பாக நடைபெற இந்த கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.

மேலும் காரியத்தடைகள், சிரமங்கள் உள்ள தொழில் மற்றும் திருமண தடைகளுக்கு இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இங்கு நடைபெறும் உத்தியாஸ்தமன பூஜையில் ஒரு நாள் முழுவதும் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம். பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியங்கள் நடைபெற்றவுடன் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்கின்றனர். கோவில் முன்புறம் உள்ள கால பைரவர் சன்னதியில் கண்திருஷ்டி உள்ளிட்ட தடைகளை நிவர்த்தி செய்ய சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

Tags:    

Similar News