துப்புரவு பெண் ஊழியர் சாவு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
- துப்புரவு ஊழியர் லலிதா திடீரென்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
- துப்புரவு ஊழியர்கள் சாலையில் விழுந்து கதறி அழுதனர்.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பாதிரிக்குப்பம் ஊராட்சி செயல்பட்டு வருகின்றது. இங்கு 50-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரிந்து வந்த துப்புரவு ஊழியர் லலிதா திடீரென்று நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இறந்த லலிதா குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி 40-க்கும் மேற்பட்ட துப்புரவு பெண் ஊழியர்கள் இன்று காலை கடலூர் பாதிரிக்குப்பம் ஊராட்சி அலுவலகத்திற்கு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த துப்புரவு ஊழியர்கள் சாலையில் விழுந்து கதறி அழுதனர்.
மேலும் எங்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு ஏற்படுத்தி தர கோரி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஊராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றாததால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.