நாச்சியார்கோயில், சீனிவாச பெருமாள் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- கருட பகவான் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, பெருமாள்-தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- முக்கிய நிகழ்வான கல்கருட சேவை வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.
சுவாமிமலை:
கும்பகோணம் அடுத்த நாச்சியார்–கோயிலில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது.
108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக உற்சவர் பெருமாள்- தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, மேளதாளங்களுடன் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவான் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, பெருமாள்-தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோவிலில், பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவிற்கு பதிலாக பிரகார உலாவாக நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான கல்கருட சேவை வருகிற (ஏப்ரல்) 1-ந்தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து, 6-ந்தேதி உற்சவர் பெருமாள்-தாயாருடன் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது.
8-ந்தேதி விடையாற்றி நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.