உள்ளூர் செய்திகள்

பறவை காவடி எடுத்து வந்த ராம்தாஸ்.

செங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவிலில் பறவை காவடி ஊர்வலம்

Published On 2023-05-03 09:03 GMT   |   Update On 2023-05-03 09:03 GMT
  • குற்றாலத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
  • நள்ளிரவில் அம்பாள் சப்பர வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கோட்டை:

செங்கோட்டை யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவில் கொடைவிழா கடந்த 25-ந் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை, தீபாராதனைகள் மற்றும் கும்மியாட்டம், கோலாட்டம், திருவிளக்கு பூஜைகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான கொடை விழாவையொட்டி காலை குற்றாலத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், 6 மணிக்கு முளைப்பாரி, பூந்தட்டு ஊர்வலமும் அதனை தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து சுப்புரமணியதெரு பகுதியை சேர்ந்த ராம்தாஸ் என்பவர் 2-ம் ஆண்டாக பறவை காவடியை எடுத்து ஊர் முழுவதும் ஊர்வலமாக வந்தார். இரவு தீச்சட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நள்ளிரவில் அம்பாள் சப்பர வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு முளைப்பாரி எடுத்து ஆற்றில் கொண்டு கரைத்தல், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஏற்பாடுகளை யாதவர் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செயதிருந்தனர்.

Tags:    

Similar News