பள்ளிகள் திறப்பையொட்டி கடைகளில் குவிந்த பெற்றோர், குழந்தைகள்- பேக்குகள், காலணி, சீருடைகள் விற்பனை மும்முரம்
- 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதி பள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
மீண்டும் திறப்பு
விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறை யாததால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த கல்வி ஆண்டில் 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 12-ந் தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 14-ந்தேதியும் பள்ளி திறக்கப்படும் என்று அறிவி க்கப்பட்டது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
தூய்மைப்பணி
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பையொட்டி அனைத்து பள்ளி வளாகங்களிலும் தூய்மை பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வகுப்பறைகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட மற்றும் மாநக ராட்சி நிர்வாகங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. சேதமடைந்த மேற் கூரைகள், சுவர் பூச்சுகள் சரிசெய்யப்பட்டு உள்ளது.
அறிவுறுத்தல்
முதல் நாளில் பள்ளிக்கு வரும் மாணவர்களை உற்சாகமாக வரவேற்க வேண்டும். பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடை, காலணி போன்ற இலவச நலத்திட்ட பொருட்களை மாண வர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.
தொடக்க நாளிலேயே பாடங்களை நடத்தாமல், மாணவர்களின் விடுமுறை நிகழ்வுகள் பற்றி கேட்டறிதல் போன்ற உளவியல் சார்ந்த செயல் பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அதிகரிப்பு
இதற்கிடையே நாளை பள்ளிகள் திறப்பையொட்டி மாநகர் மற்றும் மாவட்டங்களில் ஸ்டேஷனரி கடைகளில் நோட்டு, புத்தகங்கள், கையேடுகள், பென்சில், பேனா, காலனி, சீருடை உள்ளிட்டவைகள் பல்வேறு வண்ணங்கள் மற்றும் மாடல்களில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இதுதவிர பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்ல புதிதாக பேக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
மாநகர பகுதியில் பெரும்பாலான கடைகளில் பேக்குகள் பல்வேறு மாடல்களில் குழந்தைகளை கவரும் வகையில் தொங்கவிடப் பட்டிருந்தன. அவற்றை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சென்று ஆர்வமுடன் தேர்வு செய்கின்றனர். டவுனில் பெற்றோர்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்றதால் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.