பெற்றோர் எதிர்ப்பு: திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்
- இரு வீட்டாருடனும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை.
- திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக மணமகன் வீட்டார் உறுதி அளித்தனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஹேமகுமார் (வயது24) என்பவரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வினிதா(வயது21) என்ற இளம் பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி, ஐயர் கண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் இன்று முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், ஆரணி காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதை தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையிலான போலீசார் இரண்டு வீட்டாருடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடந்து மணமகன் ஹேமகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது மகனின் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தனர். பின்னர் திருமண ஜோடியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இப்பிரச்சினையால் ஆரணி காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.