நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல இரவு நேர பஸ்கள் இல்லாததால் பயணிகள் தவிப்பு
- நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல், செம்பட்டி, மைக்கேல் பாளையம் போன்ற ஊர்களுக்கு செல்ல பகலில் போதிய பஸ் வசதி இல்லை.
- பகல் நேரத்தில் கூடுதல் பஸ்களும், இரவு 10 மணிவரை பஸ்களும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழகத்திலேயே 2-வது பெரிய பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மேலும் இதன் அருகிலேயே வாரச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. நிலக்கோட்டையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விவசாயம் செய்யப்படுகிறது.
இங்கு பறிக்கப்படும் பூக்கள் நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், வடமாநிலங்களுக்கும், சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால் பல்வேறு ஊர்களில் இருந்தும் நிலக்கோட்டை சந்தைக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை தருகின்றனர். திண்டுக்கல், செம்பட்டி, மைக்கேல்பாளையம் போன்ற ஊர்களுக்கு செல்ல பகலில் போதிய பஸ் வசதி இல்லை.
இரவு 7 மணிக்குமேல் திண்டுக்கல் செல்ல பஸ்களே இல்லை. இதனால் வியாபாரிகள் வத்தலக்குண்டு, கொடைரோடு போன்ற ஊர்களுக்கு சென்று அங்கிருந்து வேறுபஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வீண்அலைச்சலும், காலவிரயமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
தங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதி பஸ் செலவுக்கே சென்றுவிடுவதாக வியாபாரிகள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல பகல் நேரத்தில் கூடுதல் பஸ்களும், இரவு 10 மணிவரை பஸ்களும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.